ஓர் இந்தியர் உயிரின் விலை 25,312 ரிங்கிட் 55 காசு மட்டும்!
Tue, Jul 20, 2010
ஆறு. நாகப்பன்
கம்பார், கோலடிப்பாங் தொங்குபாலம் இடிந்து விழுந்ததில் மூன்று இந்திய மாணவிகள் பலியாயினர். அவர்களின் குடும்பத்திற்கு தலா (ஒவ்வொரு உயிருக்கும்) 25,312 ரிங்கிட் 55 காசு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள் கம்பார் கோல டிப்பாங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் கம்பார், மம்பாங் பிஅவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தீனாதேவி த/பெ நாதன், தேவதர்சிணி த/பெ மகேஸ்வரன், கோப்பெங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த வி. திவ்யசிரீ ஆகிய மாணவிகள் மூவரும் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்தனர்.
இவர்கள் ஒரே மலேசியா மாணவர் திறன் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இது பள்ளி சார்ந்த புறப்பாட நிகழ்ச்சி. பள்ளி நடவடிக்கையின்போது நடைபெற்ற இந்த விபத்துக்கு கல்வித்துறையோ, பொதுப்பணித்துறையோ, நகராண்மைக்கழகமோ எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
உடனே அங்கு ‘விசிட்’ அடித்த ஒரே மலேசியா பிரதமர் பாலம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.
பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட பாலத்தின் பாதுகாப்புக்குப் பள்ளியே பொறுப்பேற்க வேண்டும். எனவே கல்வித்துறையின் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றார் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன்.
பாலம் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதற்குப் பள்ளி நிர்வாகம் பொறுப்பு. இந்தப் பாலத்தைக் கட்டுவதில் பொதுப்பணித்துறைக்குத் தொடர்பு இருக்க வேண்டும்.
பள்ளியின் நிலம் அரசுக்குச் சொந்தமானதால் அதில் கட்டப்படும் கட்டடங்கள், பாலங்கள் அனைத்தும் தொடர்புடைய துறைகளில் முறையான அனுமதி பெற்றுக் கட்டப்பட்டிருக்க வேண்டும். பயன்படுத்தப்படுவதற்கு முன் முறையான சோதனைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். கட்டுமானம் தொடர்பான சட்டவிதிகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுள்ளதா என்று கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எதுவுமே இல்லாமல் தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாகக் கட்டிக் கொடுத்தது என்று கல்வித்துறையும் அரசுத் துறைகளும் தங்கள் பொறுப்புகளையெல்லாம் கைகழுவிவிட்டிருக்கிறது.
சட்ட நடவடிக்கை
இதைப் பற்றி வழக்கறிஞர் சிவநேசனைத் தொடர்பு கொண்டோம். அவர் இந்த வழக்கு குறித்த சில விவரங்களை வழங்கினார்.
“சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலத்தைக் கட்டிய குத்தகையாளரும் கல்வித்துறையும் எதிர் வழக்காட முன் வராமல் நீண்ட காலத்தைக் கடத்திய பின் இப்போது எதிர்வழக்காடுவதற்கு நீதி மன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது எதிர்வரும் 28ஆம் நாள் நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது.
பிரதிவாதிகளின் எதிர்வழக்காடும் அனுமதி ஏற்றுக் கொள்ளப்பட்டால் வழக்கு நடைபெறும். ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாம் கோரியுள்ள இழப்பீட்டை வழங்க நீதிமன்றம் ஆணையிடக்கூடும்” என்று சிவநேசன் கூறினார்.
இந்த விபத்து குறித்து அரசு தரப்பிலும் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் கேட்கக் கூடும். மேலும் பாக்காதான் கட்சித் தலைவர்களும் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதன் முடிவுகள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிவநேசன் கூறினார்.
இனப்பகை அல்ல!
இந்த நேரத்தில் ஒரு கேள்வி கேட்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. இறந்து போன மாணவிகள் மூவரும் இந்தியர்கள். இறந்து போனவர்கள் பூமிபுத்ரா மாணவிகளாக இருந்திருந்தால் அந்த மரணங்கள் இப்படித்தான் அலட்சியப்படுத்தப்பட்டிருக்குமா?








Leave a Reply