A A
Tuesday, September 7th, 2010

ஏழைகளின் வாழ்க்கைத்தரம் இழிகிறது!

Mon, Jul 26, 2010

செய்திகள்

ஆறு. நாகப்பன்

மலேசியாவில் விலைவாசி பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. அரசியலால் கூட்டிக் கழிக்கப்பட்ட புள்ளிவிவரங்களே கிடைக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த ஊதிய உயர்வைக் காட்டிலும் விலைவாசிகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.  அடித்தர, நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

barangan pengguna 1 இறக்குமதி வரி, விற்பனை வரி, முதன்மைப் பொருள்களுக்கான உரிமக் கட்டுப்பாடு, இடைத்தரகு,  காண்காணிப்பு இல்லாத வணிக முறை, கள்ளச்சந்தை இப்படிப் பல காரணங்களால் செயற்கையான விலைவாசி உயர்வு கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்து வருகிறது. (இயற்கையான விலைவாசி உயர்வு உற்பத்தி குறைந்து பயனீடு அதிகரிக்கும்போது வருவது)

அண்மையில் ஒரு தமிழ் நாளேட்டில் வந்த முதன்மைப் பொருள்களுக்கான விலைப்பட்டியல் மலேசிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் பாதாளத்தை நோக்கித் தாழ்வதைக் காட்டுகிறது.

பிரிக்பீல்ட்ஸில் முதன்மை உணவுப் பொருட்களின் பேரங்காடி உரிமையாளர் ஒருவரிடம் இந்த விலை உயர்வைக் குறிப்பிட்டுக் கேட்டபோது இதனை அவர் உறுதிப்படுத்தியதோடு கடந்த பத்து ஆண்டுகளில் இந்த விலைவாசி உயர்வு தங்கள் வியாபாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறினார்.

சாப்பிட மட்டும் தெரிந்த மலேசியருக்கு இந்த விலைப்பட்டியல்  நாட்டு நடப்பு  தொடர்பான  பல பொருளியல் உண்மைகளைப் புலப்படுத்தும் ஒரு பாடமாக இருக்கும்.

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களின் பயனீட்டாளர் விலைகளைப் பாருங்கள். (விலைகள் கிலோவுக்கானது)

துவரம்பருப்பு ரிம. 5.50லிருந்து ரிம. 9.00 

உளுந்து ரிம. 4.50லிருந்து ரிம. 9.00

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ரிம. ரிம. 3.50லிருந்து 7.50

பூண்டு ரிம. 3.00லிருந்து ரிம 10.00

சிறிய வெங்காயம் ரிம. 3.50லிருந்து ரிம 6.00

பெரிய வெங்காயம் ரிம. 0.90லிருந்து ரிம. 3.00

உருளைக்கிழங்கு ரிம. 2.00லிருந்து ரிம 3.00

என்று இப்பொருள்கள் விலை உயர்வைக் கண்டுள்ளன. இதற்கிடையில் அண்மையில் உயர்ந்த எரிபொருள் விலை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்த முதன்மை உணவுப் பொருள்கள் கிட்டத்தட்ட 100% விலை உயர்வைக் கண்டிருப்பதைக் காணலாம். விலை உயர்வால் மலேசியர் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி அடையாமல் இருக்க வேண்டுமானால் இவர்களின் ஊதியமும் 100% உயர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் 100%  ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

விலைவாசி உயர்வைச் சரிகட்டும் ஊதிய உயர்வு இல்லையென்றால் மக்கள் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைவது உறுதி.

வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி என்றால் என்ன?

ஒரு சராசரி மனிதனுக்கும் புரிகிற பொருளாதார உண்மை இது.

மலேசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை எடுத்துக்காட்டாகக் காட்டுவோம்.

விலைவாசி 100% உயர்ந்துள்ளது. சம்பளம் 50% மட்டும் உயர்ந்துள்ளது என்று வைத்துக் கொண்டாலும் மக்களின் வழக்கமான வாழ்க்கைத்தரம் 50% வீழ்ச்சியடைந்துவிடும்.

keluarga miskin 2 விலைவாசிகளோடு ஒப்பிடும்போது ஏழைகளாகிவிட்ட மலேசியர் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒரு கட்டாய சிக்கனத்தைக் கடைப்பிடிப்பர்.

அப்போது வழக்கமாகப் பயன்படுத்தும் தரத்திலிருந்து குறைந்த தரமுடைய பொருள்களுக்கு மாறுவர். அவசியமான அளவையும் குறைத்துக் கொள்வர். புதிய ஆடைகள் அவசியமென்றாலும்  வாங்குவதை ஒத்திப் போடுவர்.

குழந்தைகளுக்கு அவசியமான உணவுப் பொருள்கள், ஆடைகள், மருந்துகள் ஆகியவற்றிலும் காட்டாய சிக்கனம் தேவையாகும். வீட்டைப் பழுது பார்ப்பது தள்ளிப் போகும். வாடகை வீட்டில் குடியிருப்போர் மலிவான வாடகையைத் தேடிப் போக வேண்டியிருக்கும்.

உடல் நலம் தொடர்பான செலவுகளைக் கூடக் கட்டுப்படுத்த வேண்டி வரும். இதனால் உடல் நலம் குன்றிய நிலையிலேயே வாழ முயற்சி செய்ய வேண்டும். இவை யாவும் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டும்.

ஏழ்மைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு வாங்கும் சக்தி குறையும்போது  பயனீட்டாளர் பொருள்களின் விற்பனை குறையும். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கும். தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு செய்யப்படும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்கும்.

இப்படிச் சங்கிலிக் கோர்வையாகச் சமூகப் பிரச்சனைகள் வளரும்.

ஏழ்மையும் சமூகச் சீர்கேடுகளும் வளரும்போது மலேசியா போன்ற நாடுகளில் அரசியல் நடத்துவது அரசியல்வாதிகளுக்கு எளிதான செயலாக இருக்கும்.

அவ்வப்போது மனசுக்கு இதமான சில அறிவிப்புகள், சில சில்லரை சமூக உதவிகள், தேர்தல் காலத்தில் அன்பளிப்புகள் இவற்றை வழங்குவதன் மூலம் வாக்காளர்களை எளிதாக ‘நிர்வகிக்க’ முடியும். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அவரவர் குடும்பத்தை நிர்வாகம்செய்வதிலேயே வாக்காளர்கள் களைத்துப் போயிருப்பர். அதனால் அரசியலில் நடக்கும் ஊழல்கள் அவர்களின் அக்கறைக்கு அப்பால் போய்விடும்.

என்றாலும் அரசியல்வாதிகளின் இந்த வசந்த காலத்திற்கும் ஒரு முடிவு வரும். தாங்க முடியாத இந்தத் தலைச்சுமை யாரால் வந்தது என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் மற்றோர் அரசியல் சுனாமி வருவதை யாராலும் தடுக்க முடியாது.

2 Comments For This Post

  1. குடிமகன் Says:

    மற்றும் ஓர் அரசியல் சுனாமியை உருவாக்கி தற்போதைய சூழ்நிலைக்கேற்ப நமது அரசியல் அமைப்பு சட்டத்தை சரி செய்ய வேண்டும் இல்லையேல் நாட்டை கொள்ளையடிக்கும் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருப்பார்கள் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருப்பார்.

    பாரிசான் நேசனல் அரசாங்கம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் கிடப்பில் வைத்துள்ள மக்களிடமிருந்து RM 1மில்லியன் வசூலிக்கும் பொருள் சேவை வரித்திட்டத்தை(GST) அமலாக்கம் செய்யக்காத்துக் கொண்டிருக்கிறது.சம்பந்தப்பட்ட அமைச்சர் இதனை தற்போது கிடப்பில் மட்டுமே வைத்துள்ளோம்.அமலாக்கம் செய்யும் நேரம் வரும் பொழுது அமலாக்கம் செய்வோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  2. maeganmala Says:

    IF WANTED TO VOTE PAKATAN OR BN BETTER GET BLACK AND WHITE WRITTEN LEGALY PROMISES FOR INDIAN ISSUES OTHERWISE NO NEED TO CARRY ANY BODYS BACKSIDE AND SAY NAJIB VALGA, ANWAR VALGA,WAN AZIZAH VALGA, NURI IZZAH VALGA.

Leave a Reply

Follow Us On…